நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Thursday, 20 January 2011

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.
" உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?

 


கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள். 

Sunday, 26 December 2010

உயிர்மெய்

பிறப்பு என்பது ஒரு தமிழ்ச் சொல். அது ஓர் உயிரானது உடலோடு சேர்ந்து உலகத்துக்கு வருவதைக் குறிக்கின்றது.
இறப்பு என்பது இன்னொரு தமிழ்ச் சொல். அது இந்த உலகத்தில் உடலோடு சேர்ந்து வாழ்ந்த உயிர், உடலை விட்டு பிரிந்து போவதைக் குறிக்கின்றது.
பிறப்பின் தன்மையையும் இறப்பின் தன்மையையும் இந்த இரு தமிழ்ச் சொற்கள் குறிப்புட்டு காட்டுவதைப் போல பிற மொழியில் உள்ள அதற்கு நேரான சொற்கள் குறிப்பிடுபவனாக இல்லை. பிறப்பு, இறப்பு என்னும் சொற்களில் உள்ள எழுத்துக்களில் முதல் எழுத்தைத் தவிர மற்ற மூன்று எழுத்துக்களும் ஒன்றாகவே உள்ளன.
             
பிறப்பு என்பதில் உள்ள முதல் எழுத்து "பி" இது ஓர் உயிர் மெய் எழுத்து. அதாவது உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து பிறக்கின்ற எழுத்து.
 'ப்' என்பது மெய்யெழுத்து 'இ' என்பது உயிர் எழுத்து. இரண்டும் சேர்கின்ற பொழுது ப் + இ = பி என்று ஆகிறது.

             உலகத்தில் உடலும் உயிரும் சேர்ந்து பிறப்பதைக் குறிக்கின்ற சொல்லில் உள்ள 'பி' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.

பி - என்னும் உயிர்மெய் எழுத்திலிருந்து 'ப' என்னும் மேய்யேளுத்தை நீக்கிவிட்டால், விட்டு விட்டால், தனித்து நிர்ப்பது 'இ' என்னும் உயிர் எழுத்து.
             உடலை விட்டுப் பிரிந்து உயிர் தனித்து நிற்கின்ற நிலைதானே இறப்பு என்பது! இறப்பு என்னும் சொல்லில் உள்ள 'இ' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.
            உயிர் உடலோடு சேர்வது 'பிறப்பு'
            உயிர் உடலை விட்டுப் பிரிவது 'இறப்பு'
         
மெய் என்றால் உடல், மெய்யெழுத்து என்றால் உடல் போன்ற எழுத்து. புள்ளி உள்ள எழுத்து உயிரோடு சேராத உடல் தனித்து இயங்க முடியாது.
  நிற்கவும் முடியாது. இந்த உண்மையைக் காட்டுவது போலத்தான் மெய்யெழுத்து மொழிக்கு முதலில் ஒரு சொல்லின் முதலில் வரக்கூடாது என்று இலக்கணம் கூறுகிறது.
எனவே 'ப்ரேமா'- என்று தமிழில் எழுதக் கூடாது. பிரேமா என்று தான் எழுத வேண்டும்.

Wednesday, 15 December 2010

மனம் பற்றற்றிருக்க...

துறவு என்றால், காவியுடை அணித்து காட்டுக்குப் போய் விடுவது; அல்லது ஏதாவது ஒரு மடத்தில் போய் சேர்ந்து விடுவது; மனைவி மக்களையும் வீட்டையும் விட்டு ஓடி விடுவது என்றுதான் பொதுவாக நாம் எண்ணுகிறோம்.ஆனால், உண்மையில் துறவு என்பது மனத்துறவு தான். மனம் எந்த பொருளிடத்திலும் யாரிடத்திலும் ஒட்டுதல் இல்லாமல் பற்று இல்லாமல் இருப்பது தான்.
            வீட்டில் இருந்து மனைவி மக்களோடு வாழ்ந்தாலும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். 'நான்' என்கிற செருக்கும் 'எனது' என்கிற பற்றுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த எந்தப் பொருளிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ அந்த அந்தப் பொருளினால் வருகின்ற துன்பம் நமக்கு இல்லை என்பதை உணர்ந்து நம் மனத்தைப் பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மனத்தில் பற்றுதலைத் துறக்காமல், துறந்தவரைப் போல வெளிவேடம் அணித்து வஞ்சித்து வாழ்பவரைப் போல் இரக்கமற்ற கொடியவர் வேறு யாருமில்லை என்கிறார் திருவள்ளுவர்.
                    "நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
                      வாழ்வாரின் வன்கணார் இல்" -குரல் 276
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களையும் நாம் அடக்கி ஆள வேண்டும். அவை நம்மை ஆட்டிப் படைக்க விட்டுவிடக் கூடாது. அப்போது தான் பற்றற்று இருக்க முடியும்.
                 "ஓர் அழகான ஓவியத்தை கண்டதும் அதனை வாங்க வேண்டும்- வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்- என்று விரும்புகின்றவனை விட, அதனை வாங்க நினைக்காமல் வேடிக்கை பார்ப்பவனே மிகுதியாக அதன் அழகை சுவைக்கிறான். அதுபோல் எதனையும் நம்முடையது - நமக்காக உள்ளது என்று பற்று  வைக்காமல் உலகத்தை அனுபவிக்க வேண்டும்" என்கிறார் விவேகானந்தர்.
                   "படகு தண்ணீரில் இருக்கலாம், ஆனால் தண்ணீர் படக்குக்குள் நுழையக்கூடாது. நுழைந்தால் படகு கவிழ்ந்து விடும். அதுபோல் மனிதன் உலகத்தில் வாழலாம், ஆனால் உலகப்பற்று அவனிடத்தில் இருக்க கூடாது" என்கிறார் இராமகிருஷ்ணர்.
                   "இவ்வுலகத்தில் ஒன்றும் நிலையானது அன்று. மிகவும் நெருங்கியுள்ள ஒவ்வொரு பொருளின்றும் நாம் விடுபடுதல் வேண்டும். அப்படி விடுபடுவதே பேரின்பத்திற்கு வழியாகும்" என்கிறார் புத்தர்.
                   "தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதில் பற்று கொண்டால், ஆன்மா ஒரு போதும் மகிழ்ச்சி அடையாது" என்கிறார் மகாவீரர்.
          
                           மனம் பற்றற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நிலையாமையைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். உடல் நிலையாமை, இளமை நிலையாமை,செல்வம் நிலையாமை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "பிறக்கும் பொது நாம் என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்பொழுது நாம் என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லையே! அப்படி இருக்க பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம்மோடு வந்து சேர்ந்திருக்கும் பொருள்களின் மேல் நாம் ஏன் பற்று வைக்க வேண்டும்?.
"நம்மி கட்டி அனைத்துக் கொஞ்சுகின்ற மனைவியும் மக்களும், தச்சன் ஒருவன் மரத்தை வெட்டி சாய்ப்பது போல் காலன் உடலை கீழே சாய்த்து விட்டால், அலறி அழுது இடுகாடு மட்டும் தான் வருவார்களே அன்றி அதற்க்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைப்பார்களா? வைக்க மாட்டார்களே!
         "நம் உடலைவிட்டு உயிர் பிரிகின்ற வரையில் தான் எல்லாம் நம்முடன் இருக்கின்றன. சொத்தும் சுகமும் வீடுவரை தான். கண்ணீர் விட்டு அழுகின்ற மனைவியோ தெருவரையில் தான். விம்மி விம்மி அழுது புலம்புகின்ற மக்களோ இடுகாடு வரையில் தான்! அதற்குப் பின் நம் உயிரோடு வருவது நாம் செய்த புண்ணியம் பாவம் என்கிற நல்வினை தீவினை தானே!" என்றெல்லாம் பட்டினத்தார் கூறும் கருத்துக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நினைத்துப் பார்த்தால் பற்றற்ற மனம் வந்துவிடுமே!

Thursday, 25 November 2010

அவரவர் விதி !

இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், ""காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக வேண்டியதுதான்!'' என்றார்.
இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற வழியில் முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார். வலி தாங்க முடியாமல் அவர் முனகிக் கொண்டிருந்தார். இருவரும் அருகே சென்று அவரைப் பார்த்தனர்.
""மலைப் பாதையில் உருண்டு விழுந்ததால் இவர் கால் ஒன்று உடைந்துவிட்டது. இனி இவரால் நடக்க முடியாது. தாமதம் செய்தால் நம்மாலும் மடத்தை அடைய முடியாது. உடனே நாம் இங்கிருந்து புறப்படுவோம்!'' என்றார் அவர்களில் ஒருவர்.
""இந்த நிலையில் இவரை எப்படி இங்கே விட்டுச் செல்வது? நாம் இருவரும் இவரை எப்படியாவது மடத்திற்குத் தூக்கிச் செல்வோம். அங்கே உள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்வர்!'' என்றார் இன்னொருவர்.
""நாமே உயிருடன் மடத்தை அடைவோமா என்பது தெரியவில்லை. அவரவர் வினையை அவரவரே அனுபவிக்க வேண்டும். இங்கேயே சாக வேண்டும் என்பது இவர் விதி. நீர் வந்தால் வாரும்; நான் போகிறேன்!'' என்று சொன்னார் அவர். அடுத்தவரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினார். கால் உடைந்து கிடந்தவரை அப்படியே விட்டுச் செல்ல இன்னொருவருக்கு உள்ளம் வரவில்லை. தன் உயிர் போனால் போகட்டும் என்று அவரைத் தோளில் தூக்கிக் கொண்டார். மலைப்பாதையில் ஏறத் தொடங்கினார்.
மிகுந்த எடையைத் தூக்கிச் சென்றதால் அந்தக் கடுங்குளிரிலும் அவருக்கு வியர்த்தது. துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு மலை உச்சியை நெருங்கினார். அவருக்கு முன்னே சென்ற துறவி அங்கே வழியில் இறந்துகிடந்தார். குளிர் தாங்காமல் அந்தத் துறவி விறைத்துப் போய் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரிந்தது.
அவரைப் போல இந்தக் குளிரில், தான் ஏன் இறக்கவில்லை என்று சிந்தித்தார் அவர். அந்த முதியவரைத் தூக்கி வந்ததால் அதிகமாக மூச்சு வாங்கியது. அதனால் உடல் எங்கும் கூடுதலாக ரத்தம் பாய்ந்து வெப்பம் ஏற்பட்டது. அத்துடன் அந்த முதியவரின் உடல் சூட்டால் இருவரது உடலும் சூடு கண்டது. அதனால், கடுமையான குளிர் தன்னைக் கொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பிறருக்கு உதவி செய்வதால் நம்மையே விளையும். அந்த உதவியே தன் உயிரைக் காப்பாற்றியது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது

Monday, 8 November 2010

விவேகமானவராக வேண்டுமா ?

தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும். "இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா...' என்று சிலர் சொல்லலாம்.
பின்னே எதுதான் வேண்டும்? எது வாழ்க்கைக்கு உதவக் கூடியது? எது அறிவை வளர்ப்பது? எது மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும். பருத்தி பளபளப்பாக உள்ளது போல், சான்றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை மேற்கொள்கின்றனர். சான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, காக்கை, வாத்து போல் குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பினால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று, முனிவரானார்.  ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது. சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும்.  சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.
சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர். சான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள், உலக நன்மை யை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர். நாமெல்லாம் எப்படியோ? சான்றோர் வரிசையில் சேர முடியுமா?                                       

Thursday, 4 November 2010

தீபாவளி அன்று...

  • ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்தி திரும்பினார்.
  • மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார்.
  • நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்தார்.
  • மகாபலி மன்னன் அரியணை ஏறினான்.
  • மகாவீரர் முக்தி அடைந்தார்.
  • விக்கிரமாதித்யன் முடிசூடிக் கொண்டான்.
  • மாவீரன் சிவாஜி, தனது எதிரிகளை வென்று கோட்டைக்குள் விளக்கு ஏற்றினார்.
  • கோதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவா பெருமானின் உடலில் பாதி பெற்றார்.
  • சுவாமி ராமதீர்த்தர் தீபாவளி அன்று பிறந்து, தீபாவளி அன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளி அன்றே சமாதி அடைந்தார்.
  • ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஸ்தாபித்தார்.
  • சீக்கிய மதகுருவான குருநானக் முக்தி அடைந்தார்.
  • குபேரன் சிவபெருமானை வழிபட்டு பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
  • காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தாள். 

நல்ல எண்ணங்கள் என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து, இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளி.

இறைவனுக்கே மகனாக இருந்தாலும் சில நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் இயங்க வேண்டும். தந்தை உயர் பதிவியில் இருந்தாலும், அவரது மகன் தவறு செய்ய அனுமதிக்க முடியாது.

தாய், தனது மகனை எவ்வளவு கண்டிப்புடனும், கண்காணிப்புடனும் வளர்த்தாலும் அவனிச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருகிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.

இறப்பு என்பது தவிர்க்க இயலாதது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும். அந்தவகையில் ஒருவன் வாழக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நரகாசூரன்.

தாய், தந்தையராக இருந்தாலும் அறம் எதுவோ, உலக நன்மைக்கு எது உகந்ததோ, அதையே என்றும் பாராமல் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் செய்தனர்.

செய்தது தவறு என்று தெரிந்ததும், அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவது உயர்ந்த பண்பு.

செய்த தவுறுக்காக வருந்துவதும், அதை ஒத்துக் கொள்வதும் நாம் முன்னேற்றம் அடைய உதவும்.

-நரகாசூரன் கதை தவிர, கதைகள் பல இருந்தாலும், அவற்றின் மையக் கருத்து தீமை வெல்லப்படும் என்பதாகவே இருக்கிறது.

அகங்காரம், பொறாமை, தலைக்கனம் இவற்றை நம்மிடமிருந்து அகற்ற வேண்டும் என்பதையே தீபாவளி வலியுறுத்துகிறது.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Thursday, 28 October 2010

பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ?

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி  அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.  ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.  கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும்.  கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர்.  இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.