நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Saturday, 31 July, 2010

பிரச்னை தீர வேண்டுமா ?

மனித வாழ்க்கை பல பிரச்னைகள் நிறைந்தது. இரவு நேரம் வந்ததும், இன்று என்னென்ன செய்தோம், எதெல்லாம் விட்டுப் போயிற்று, எதெல்லாம் நினைத்தபடி நடந்தது, எதெல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்று சிந்திக்கிறான் மனிதன்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.

அவைகளில் எதெல்லாம் நடக்குமோ தெரியாது. இப்படி பல பிரச்னைகளில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியாத ஒரு சிலர், "ஹூம்... எப்படியோ நடக்கட்டும். பகவான் விட்ட வழி...' என்று சொல்லி, பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்து விடுவர். நம்மை நம்பியுள்ள பக்தனின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான் பகவான்; அதற்கு, சில வழிமுறைகளை சந்தர்ப்பங்களாக ஏற்படுத்துகிறான். பிரச்னைகள் தீர வழி வைக்கிறான். இதுதான் பகவான் விட்ட வழி என்கின்றனர்.

நம்பினவர்களுக்கு வழி செய்தும் கொடுக்கிறான்; தவறான வழியில் போகிறவனை தடுத்தும் நிறுத்துகிறான் பகவான். வழி தெரியாதவர்களுக்கு வழியும் காட்டுகிறான்; திக்கு திசை தெரியாமல் விழிப்பவர்களுக்கு, வேறு உருவில் வந்து, வழிகாட்டியாக அழைத்துச் செல்கிறான். சேரவேண்டிய இடம் வந்ததும் மறைந்து விடுகிறான்.
ஹரதத்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இருக்குமிடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு, தினமும் போவது வழக்கம். ஒருநாள் மாலை, கோவிலுக்கு புறப்பட்ட போது, இடி, மின்னலுடன் காற்றும், மழையுமாக இருந்தது. அதில், கோவிலுக்கு போகும் வழியை தவற விட்டு விட்டார். எந்த வழியில் போவது என்று தெரியாமல், தடுமாறிக் கொண்டிருந்தார்.

அந்த சமயம், ஒரு இடையன் அங்கு வந்தான். "ஐயா... நீங்கள் கோவிலுக்கா போக வேண்டும்?' என்று கேட்டான். "ஆமாம்! ஆனால், வழி தெரியவில்லை...' என்றார் தத்தர். "சரி... நானும் அங்கே தான் போகிறேன்; என்னோடு வாருங்கள்...' என்றான் அவன். இருவரும் கோவில் வரை சென்றனர். அந்த இடம் வந்ததும், வழிகாட்டியாக வந்த இடையன் மறைந்து விட்டான். இவர் சுற்றும், முற்றும் தேடிப் பார்த்தார்; ஆளைக் காணவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது... வழிகாட்டியாக வந்தது இடையன் அல்ல; சாட்சாத் பரமேஸ்வரன் தான் என்று. கோவிலுக்குள் போய் பகவானை தரிசித்து, பலவாறு துதித்தார்.

பகவான் வழிகாட்டியாக வந்தார். சரி... ஆனால், ஏன் சுய உருவில் வராமல், இடையனாக வந்தார்? அதுதான் ரகசியம். "பகவான் எப்படி இருப்பார்!' என்று, மனதால் நினைக்கும்போது தான், பக்தி செய்ய முடியும். பரமேஸ்வரனே புலித்தோல், மண்டையோடு, நெருப்பு சட்டி, சூலம் எல்லாவற்றோடும் இவன் எதிரில் தோன்றினால் என்ன ஆகும்? ஆள் அலறி அடித்து ஓட்டமாக ஓடி விடுவான். பகவான் நேரில் வந்ததற்கு, பயன் எதுவும் இருக்காது. அதனால், மனித உருவில் வந்து, வழிகாட்டிவிட்டுப் போய் விடுகிறார். அந்தக் காலத்தில், பகவான் நேரில் தரிசனம் கொடுத்தார்; வரம் கொடுத்தார் என்றெல்லாம் புராணங்களில் உள்ளது. ஆனால், இந்தக் காலத்தில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. பகவான், இப்போதெல்லாம் நேரில் வர மாட்டார். மனித உருவில் வந்து, நல்வழி காட்டி விட்டுப் போய் விடுகிறார்.

Sunday, 4 July, 2010

செலவு இல்லாமல் புண்ணியம் கிடைக்குமா ?

புண்ணியத்தை சுலபமாகத் தேடிக் கொள்ள, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; அடிக்கடி சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நாளைக்கு, ஒரு தடவை சொன்னாலும் போதும். வாழ்நாள் முழு வதும் சொல்ல முடியாவிட்டாலும், கடைசி காலத்தில் சொன்னா லும் போதும்... சகல பாவங்களும் அகன்று, புண்ணிய லோகம் கிடைக்கும். இதற்கு புராணத்தில், "அஜாமிளன் சரித்திரம்' என்று ஒன்று உள்ளது. வேத சாஸ்திரம் அறிந்தவர் அஜாமிளன். தினமும் காட்டுக்கு சென்று சமித்து, தர்ப்பை எல்லாம் எடுத்து வந்து, பூஜை, வழிபாடு எல்லாம் முறையாக செய்து வருபவர். இப்படி அடிக்கடி காட்டுக்குப் போகும்போது, ஒரு சமயம் அங்கிருந்த வேடப் பெண்ணைக் கண்டார். ஏதோ ஒரு மனமாற்றம்; அவளிடம் ஈடுபாடு கொண்டார்.
நாளடைவில் இந்த சிநேகம் வலுப்பெற்றது. இவரது ஆசார அனுஷ்டானம் குறைந்தது. கடைசியில் வீடு, மனைவி யாவற்றையும் விட்டு விட்டு, அந்த வேடப் பெண்ணுடனேயே தங்கி விட்டார். அது மட்டுமா? அவள் மூலமாக நாலைந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். கடைசி பிள்ளைக்கு, "நாராயணன்' என்று பெயரிட்டார். காலம் ஓடியது. இவரது மரண காலம் வந்தது; படுத்து விட்டார். இவரை அழைத்துப் போக வந்து விட்டனர் எம தூதர்கள். அவர்களைக் கண்டதும், அஜாமிளன் நடுங்கிப் போய், பயத்தில் தன் பிள்ளையாகிய நாராயணனை, "நாராயணா!' என்று கூப்பிட்டு விட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில் இருந்து இவரை அழைத்துப் போக அங்கே வந்து விட்டனர் விஷ்ணு தூதர்கள்.
இவர்களைப் பார்த்த எம தூதர்கள், "அடடா... நீங்கள் இங்கே வரலாமா? இவன் மகா பாவி. இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம்; நீங்கள் போய் விடுங்கள்...' என்றனர். அதற்கு, "இவனா பாவி? இவன் மகா புண்ணியசாலி. அதனால் தான் இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம். இவன் கடைசி காலத்தில், "நாராயணா!' என்று சொன்னதால், இவனுக்கு விஷ்ணுலோக பதவி கிடைக்கிறது...' என்றனர் விஷ்ணு தூதர்கள். இப்படி எம தூதர்களும், விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் செய்து பார்த்துவிட்டு, சரி... இதை நம் தலைவரிடமே கேட்டு விடலாம் என்று போய் விட்டனர். நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்தார் அஜாமிளன்.
அப்போதுதான் அவருக்கு ஞானம் உண்டாயிற்று... "அடடா... நாம் இவ்வளவு காலம் எவ்வளவு பாவம் செய்துள்ளோம். இந்த நாராயண நாமமல்லவா நம்மைக் காப்பாற்றியது. அதன் பெருமையை இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமலிருந்து விட்டோமே...' என்று, வருத்தப்பட்டார். வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனைக் குறித்து தவம் செய்து, முக்தி பெற்றார் என்பது சரித்திரம்.
பகவான் நாமாவை மறக்காமல் சொல்லுங்களேன்... செலவு எதுவுமில்லாமல், புண்ணியம் கிடைக்குமே!

Saturday, 3 July, 2010

கெட்டவர் நால்வர்...


ஒரு குருகுலத்தில் கற்றுத்தேர்ந்த இளைஞன் அவரிடம் விடைபெற்று திரும்பும் போது, குருவே! இத்தனை நாள் எனக்கு பல வித்தைகளையும், கல்வி கேள்விகளில் பயிற்சியும், தகுந்த புத்திமதிகளும் சொல்லி என்னை மனிதனாக்கினீர்கள். இவ் வுலகில் முழு மனிதனாக நான் வாழ என் மனதில் பதியுமாறு தகுந்த அறிவுரையை தயை கூர்ந்து சொல்லுங்கள், என வணங்கி கேட்டான். இளைஞனே! நீ விட்டுக்கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டு கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மறக்காமல் நடந்துகொள். நீ நல்லவனாக வாழ்வாய் என்றார் குரு. குருகுலத்தில் இதுவரை சொல்லித்தராத புது விடுகதையை தனது குரு சொன்னதைக் கேட்டு இளைஞன் சற்று தடுமாறினான். குருவே! இதுபற்றி தாங்கள் என்னிடம் ஏதும் இதுவரை கூறியதில்லை. சற்று விளக்கமாக சொல்லுங்கள். அதன்படி நடந்து கொள்கிறேன் என்றான்.

மாணவனே! சொல்கிறேன் கேள். திருமால் வாமன வடிவெடுத்து மூன்றடி நிலம் கேட்டபோது எதை வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, இறைவனின் ஒரு அடிக்கு இந்த பூமியையும், இன்னொரு அடிக்கு மண்ணுலகத்தையும், கடைசியாக மூன்றாவது அடிக்கு தன்னையே கொடுத்து கெட்டுப்போனவன்தான் விட்டுக்கெட்டவனான மகாபலி. அவனை ஒரு விஷயத்தில் நீ மறக்கக்கூடாது. வாக்கு கொடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். பிறர் என்ன கேட்பார்கள் என்பதை அறியாமலேயே வாக்கு கொடுப்பது தவறு. எனவே ஆராய்ந்து அறிந்து யாருக்கும் வாக்கு கொடு. அடுத்து விடாது கெட்டவனைப்பற்றி சொல்கிறேன். பாண்டவர்களின் தூதுவனாக கண்ணன் துரியோதனனிடம் சென்றான். ஐந்து காணி நிலமாவது தா என கேட்டான். துரியோதனனோ ஒரு அடி மண் கூட தரமாட்டேன் என சொல்லிவிட்டான். தனது சகோதரர்களுக்கு ஒரு சிறு இடத்தை விட்டுத்தராமல் போனதால் துரியோதனனும் அவனது சுற்றத்தாரும் மாண்டனர். எனவே இந்த மண்ணில் வாழ்பவர்களுடன் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்துகொள். அது உன் வாழ்க்கையை வளமாக்கும். தொட்டுக்கெட்டவன் யார் தெரியுமா? பத்மாசுரன் என்ற அரக்கன்தான்.

இவன் ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் செய்து தன் கை யார் தலைமீது படுகிறதோ அவர்கள் உடனே பஸ்மமாகிவிட வேண்டும் என்ற வரத்தை பெற்றான். இதை வைத்துக் கொண்டு இஷ்டப்பட்டவர்களை எல்லாம் கொன்றான். ஒருமுறை ஈஸ்வரனின் தலையிலேயே கை வைக்க அவன் முயன்றான். ஈஸ்வரன் தப்பி ஓடுவதுபோல நடித்தார். எல்லா ஆயுதங்களையும் இழந்து விட்டவர்போல பாவனை காட்டினார். அவனது அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். விஷ்ணுவும் அவரும் இணைந்து ஒரு தந்திரம் செய்தனர். விஷ்ணு அழகிய மோகினி ரூபம் எடுத்து பத்மாசுரன் முன் நின்றார். அவளது அழகில் மயங்கிய அசுரனிடம், நீ என்னைப்போலவே நடனமாட வேண்டும். அவ்வாறு செய்தால் உன்னை மணந்துகொள்கிறேன் என்றார். பத்மாசுரனும் மோகினியைப் போலவே நடனமாடினான். ஒரு கட்டத்தில் மோகினி தன் தலைமீது கை வைக்கவே பத்மாசுரனும் அவ்வாறே செய்தான். அந்த இடத்திலேயே பஸ்மமானான். இதுபோல பெண்களின் மீது மோகம்கொண்டு உன் தலையில் நீயே மண்ணை போட்டு கெட்டு போகாதே. தொடாமல் கெட்டவன் பற்றி கேள். சீதையின் மீது ஆசை கொண்டு அவளை சிறை எடுத்துச்சென்றான் ராவணன். பிற பெண்களை அவர்களது அனுமதியின்றி தொட்டால் ராவணனுக்கு அழிவு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக அவள்மீது தன் கைவிரல் நகம்கூட படாமல் தொடாமலேயே அவளை தன் இச்சைக்கு வற்புறுத்தினான். அந்த இலங்கேஸ்வரன் ராமனின் பாணத்திற்கு பலியானான். இவனை போல பிறன்மனை நோக்காமல் உன் மனைவியுடன் ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்திரு, என்றார்.

மாணவனின் மனம் அமைதி பெற்றது. குரு சொன்னபடியே இந்த நால்வரையும் மனதில் இருத்தி நிம்மதியாக வாழ்க்கை நடத்தினான்.

Friday, 2 July, 2010

பாவத்தில் பங்கு


ஒரு மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், அது என்ன ஏதென பார்க்காமல், அப்படியே விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை இடுவர். இதனால், தங்களுக்கு புண்ணியம் சேருமென அவர்கள் கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்ட, அந்த மன்னன், அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தின் ஒரு உருண்டையைப் போட்டான். மகரிஷியும் வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள், ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள், என சொல்லிவிட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். தானதர்மம் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கே தங்கினான். அங்கு தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை வரவழைத்து, அவளது திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி ஒருமணி நேரம் அவர்களுக்கு எடுத்துக்கூறி அனுப்பி விடுவான். இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டினர். மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்,என்றனர். இப்படியாக பல பல விமர்சனங்கள். ஒருநாள், பார்வையற்ற தன் கணவரை அழைத்து வந்த ஒரு கற்புக்கரசி, அரசரின் குடிலின் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்த கணவன், நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டார். அரசன் வீட்டு முன்பு, என்றாள் அந்தப் பெண்.

ஓ! தானம் கொடுப்பதாகச்சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா? என்றார் அந்த பார்வையற்றவர். அந்தப்பெண் அவரது வாயைப் பொத்தினாள். அன்பரே! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியர்க்கு தானதர்மம் செய்து, நற்போதனைகளைச் செய்தான். ஆனால், இவனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாணமலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. இவனைப் பற்றி தவறுதலாகப் பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள், என்றாள்.தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.