நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Thursday, 25 November, 2010

அவரவர் விதி !

இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், ""காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக வேண்டியதுதான்!'' என்றார்.
இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற வழியில் முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார். வலி தாங்க முடியாமல் அவர் முனகிக் கொண்டிருந்தார். இருவரும் அருகே சென்று அவரைப் பார்த்தனர்.
""மலைப் பாதையில் உருண்டு விழுந்ததால் இவர் கால் ஒன்று உடைந்துவிட்டது. இனி இவரால் நடக்க முடியாது. தாமதம் செய்தால் நம்மாலும் மடத்தை அடைய முடியாது. உடனே நாம் இங்கிருந்து புறப்படுவோம்!'' என்றார் அவர்களில் ஒருவர்.
""இந்த நிலையில் இவரை எப்படி இங்கே விட்டுச் செல்வது? நாம் இருவரும் இவரை எப்படியாவது மடத்திற்குத் தூக்கிச் செல்வோம். அங்கே உள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்வர்!'' என்றார் இன்னொருவர்.
""நாமே உயிருடன் மடத்தை அடைவோமா என்பது தெரியவில்லை. அவரவர் வினையை அவரவரே அனுபவிக்க வேண்டும். இங்கேயே சாக வேண்டும் என்பது இவர் விதி. நீர் வந்தால் வாரும்; நான் போகிறேன்!'' என்று சொன்னார் அவர். அடுத்தவரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினார். கால் உடைந்து கிடந்தவரை அப்படியே விட்டுச் செல்ல இன்னொருவருக்கு உள்ளம் வரவில்லை. தன் உயிர் போனால் போகட்டும் என்று அவரைத் தோளில் தூக்கிக் கொண்டார். மலைப்பாதையில் ஏறத் தொடங்கினார்.
மிகுந்த எடையைத் தூக்கிச் சென்றதால் அந்தக் கடுங்குளிரிலும் அவருக்கு வியர்த்தது. துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு மலை உச்சியை நெருங்கினார். அவருக்கு முன்னே சென்ற துறவி அங்கே வழியில் இறந்துகிடந்தார். குளிர் தாங்காமல் அந்தத் துறவி விறைத்துப் போய் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரிந்தது.
அவரைப் போல இந்தக் குளிரில், தான் ஏன் இறக்கவில்லை என்று சிந்தித்தார் அவர். அந்த முதியவரைத் தூக்கி வந்ததால் அதிகமாக மூச்சு வாங்கியது. அதனால் உடல் எங்கும் கூடுதலாக ரத்தம் பாய்ந்து வெப்பம் ஏற்பட்டது. அத்துடன் அந்த முதியவரின் உடல் சூட்டால் இருவரது உடலும் சூடு கண்டது. அதனால், கடுமையான குளிர் தன்னைக் கொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பிறருக்கு உதவி செய்வதால் நம்மையே விளையும். அந்த உதவியே தன் உயிரைக் காப்பாற்றியது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது

Monday, 8 November, 2010

விவேகமானவராக வேண்டுமா ?

தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும். "இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா...' என்று சிலர் சொல்லலாம்.
பின்னே எதுதான் வேண்டும்? எது வாழ்க்கைக்கு உதவக் கூடியது? எது அறிவை வளர்ப்பது? எது மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும். பருத்தி பளபளப்பாக உள்ளது போல், சான்றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை மேற்கொள்கின்றனர். சான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, காக்கை, வாத்து போல் குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பினால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று, முனிவரானார்.  ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது. சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும்.  சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.
சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர். சான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள், உலக நன்மை யை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர். நாமெல்லாம் எப்படியோ? சான்றோர் வரிசையில் சேர முடியுமா?                                       

Thursday, 4 November, 2010

தீபாவளி அன்று...

 • ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்தி திரும்பினார்.
 • மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார்.
 • நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்தார்.
 • மகாபலி மன்னன் அரியணை ஏறினான்.
 • மகாவீரர் முக்தி அடைந்தார்.
 • விக்கிரமாதித்யன் முடிசூடிக் கொண்டான்.
 • மாவீரன் சிவாஜி, தனது எதிரிகளை வென்று கோட்டைக்குள் விளக்கு ஏற்றினார்.
 • கோதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவா பெருமானின் உடலில் பாதி பெற்றார்.
 • சுவாமி ராமதீர்த்தர் தீபாவளி அன்று பிறந்து, தீபாவளி அன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளி அன்றே சமாதி அடைந்தார்.
 • ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஸ்தாபித்தார்.
 • சீக்கிய மதகுருவான குருநானக் முக்தி அடைந்தார்.
 • குபேரன் சிவபெருமானை வழிபட்டு பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
 • காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தாள். 

நல்ல எண்ணங்கள் என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து, இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளி.

இறைவனுக்கே மகனாக இருந்தாலும் சில நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் இயங்க வேண்டும். தந்தை உயர் பதிவியில் இருந்தாலும், அவரது மகன் தவறு செய்ய அனுமதிக்க முடியாது.

தாய், தனது மகனை எவ்வளவு கண்டிப்புடனும், கண்காணிப்புடனும் வளர்த்தாலும் அவனிச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருகிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.

இறப்பு என்பது தவிர்க்க இயலாதது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும். அந்தவகையில் ஒருவன் வாழக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நரகாசூரன்.

தாய், தந்தையராக இருந்தாலும் அறம் எதுவோ, உலக நன்மைக்கு எது உகந்ததோ, அதையே என்றும் பாராமல் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் செய்தனர்.

செய்தது தவறு என்று தெரிந்ததும், அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவது உயர்ந்த பண்பு.

செய்த தவுறுக்காக வருந்துவதும், அதை ஒத்துக் கொள்வதும் நாம் முன்னேற்றம் அடைய உதவும்.

-நரகாசூரன் கதை தவிர, கதைகள் பல இருந்தாலும், அவற்றின் மையக் கருத்து தீமை வெல்லப்படும் என்பதாகவே இருக்கிறது.

அகங்காரம், பொறாமை, தலைக்கனம் இவற்றை நம்மிடமிருந்து அகற்ற வேண்டும் என்பதையே தீபாவளி வலியுறுத்துகிறது.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..