நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Tuesday, 31 August, 2010

ஆன்மீக சாதனைபடிப்பதும், பணம் சம்பாதிப்பதும், பதவிக்கு செல்வதும், வீடு கட்டுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே. புற வாழ்க்கை வசதிகளை பெறுவதற்காக பணம் சம்பாதிக்கும் வழிகளை தெரிந்து கொள்கிறோம். ஆனால், நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்வது இல்லை. நம்மை பற்றி நமக்கே தெரிவதில்லை.
                          ஆன்மிகம் பேசும் பலருக்கு ஆன்மீகத்துக்கான அர்த்தம் தெரிவதில்லை. ஆன்மிகம் என்றால் ஆன்மா, என்னை பற்றி, நான் யார், என் லட்சணம் என்ன? என அறிவதே ஆன்மிகம். அதற்கான கல்வியே ஆன்மீக கல்வி.எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது வந்து விடுவது இல்லை. மகிழ்ச்சி, இன்பம்,பேரின்பம் என்ற மூன்று நிலைகளில் வாழ்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்வதே ஆன்மீக சாதனையாக கருதப்படும்.
                                              மகிழ்ச்சியாக வாழ உடல் நல, ஆரோக்கியம் மிக முக்கியம். ஆன்மீக சாதனையில் முதலிடத்தில் இருப்பது உடல் நலம். பல பேருக்கு உடம்பின் மதிப்பு தெரிவதில்லை. கடவுளின் அற்புதப் படைப்பு மனித உடல். உடலுக்குள் இயங்கும் உறுப்புகள், அவயங்கள் மதிப்பு மிக்கவை. உடல் உறுப்புகள் பாதிப்படையும், பொது அதன் அருமை தெரிகிறது. உடல் நலமில்லாதவன்
அவனுக்கே சுமையாக தெரிகிறான். குடும்பத்தாருக்கும் சுமையாக உள்ளான். சமுதாயத்திற்கும் சுமையாக கருதப்படுகிறான். உடல் நோயை அறிவுள்ள செய்கைகளால் தீர்த்துக் கொள்ள முடியும். உடல்நலதுக்கான
கல்வியை பெற்று நோய்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும். நோய்கள் மனிதனின் மகிழ்ச்சியை கெடுத்து விடுகின்றன. வாழ்கையில் வசதிகளை பெருக்கிக் கொள்வது மட்டுமே இன்பத்தை தராது; மன ஆரோக்கியமே இன்பம் தரும். கர்வம், சுயநலம், பற்று, பேராசை, வெறுப்பு, கோபம், பொறாமை போன்றவற்றால் மன ஆரோக்கியம் கெடுகிறது. இதனால், உள்ளத்துக்குள் எப்போதும் ஒரு கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. மனதை அமைதியாக இருக்க இவை விடுவது இல்லை.
                                                                  மன அழுக்கு, தீய உணர்வு, கறைகள், தீய எண்ணங்கள், இன்பத்துக்கு தடையாக உள்ளன. ஞானத்துக்கு செல்ல விடாமல் தடுக்கின்றன. தியானத்தால் மனம் அமைதி அடைந்து, தன்னை பற்றி ஆய்வு நடக்கும் போது ஆன்மீக சாதனை துவங்கி விடும். எத்தனை கோவிலுக்கு சென்றாலும், சடங்குகளை செய்தாலும் தன்னை உணராத வரை ஆன்மீக சாதனை துவங்காது. தியானத்தில் வெற்றி பெற்று, ஞானம் பெற தகுதியானவராக நாம் மாற வேண்டும். இதற்காக இல்லறத்தை விட்டு ஓட வேண்டாம். இல்லறத்தில் இருந்து கொண்டே தர்மத்தின் வழி சென்று ஆன்மீக சாதனைகளை செய்ய முடியும். இல்லறம், துறவறம் இரண்டுமே உயர்ந்த தர்மங்களை கொண்டிருகின்றன.
                                                             குணங்களுக்கு அடிமையாகாமல் விடுதலை பெறுவதே பேரின்பம். நான் என்பது இந்த உடல் அல்ல. உடலை வீடாக கொண்டு வசிக்கிற உயிர். எண்ணங்களின் தொகுப்பாக உள்ள மனம் ஒரு கருவி. இக்கருவியை பயன்படுத்தி உலகத்தை அறிவதே ஆன்மீக சாதனை.

Friday, 27 August, 2010

சிறுகதை

சைலாதி முனிவர் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டிற்குத் துறவி ஒருவர் வந்து பிச்சை கேட்டார். கேலி செய்ய நினைத்த சைலாதி அந்தத் துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டார். உணவுடன் அந்தக் கல்லையும் சாப்பிட்டு விட்டார் துறவி. ஆண்டுகள் உருண்டோடின. துறவி ஆனார் சைலாதி.
ஒரு சமயம் அவர் எமலோகத்திற்குச் சென்றார். எமனின் இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாறை கிடந்தது.
"எதற்காக இவ்வளவு பெரிய பாறை இங்கே கிடக்கிறது?'' என்று கேட்டார் சைலாதி. "உங்களுக்காகத்தான் இந்தப் பாறை இங்கே உள்ளது. சிறுவனாக இருந்தபோது துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டீர். அந்தத் துறவியும் அதை அறியாமல் சாப்பிட்டார். ஒருவர் செய்த பாவம் அவரே அனுபவித்தால்தான் தீரும். இது விதி. நீங்கள் போட்ட அந்தச் சிறு கல் நாளும் வளர்ந்து பெரிய பாறையாக உள்ளது. நீங்கள் இறந்து இங்கே வரும்பொழுது இந்தப் பாறையை உடைத்துச் சிறிது சிறிதாக உங்களுக்கு உண்ணக் கொடுப்போம். பாறை முழுவதும் தின்றதும் உங்கள் தண்டனை தீரும்,'' என்றான்.
""நான் இங்கு வராமலேயே இந்தத் தண்டனையை நுகர வழி உள்ளதா?'' என்று கேட்டார் அவர்.
""இதே அளவு பாறையை நீங்கள் இந்தப் பிறவியிலேயே தின்று விட்டால் உங்கள் பாவம் தீரும்,'' என்றான் எமன்.
பூவுலகத்திற்கு வந்தார் அவர். அதே அளவுள்ள பாறை ஒன்றைத் தேர்ந்து எடுத்தார். அதை உடைத்துச் சிறிது சிறிதாக உண்ணத் தொடங்கினார். அந்தப் பாறையின் அளவு குறையக் குறைய எமலோகத் தில் இருந்த பாறையும் குறைந்து கொண்டே வந்தது.
பல ஆண்டுகள் முயற்சி செய்து அந்தப் பாறை முழுமையும் தின்று தீர்த்தார். எம லோகத்தில் இருந்த பாறையும் மறைந்தது. ஒருவழியாக முனிவரின் பாவமும் தீர்ந்தது.
இந்தச் சின்ன பாவத்திற்கே இந்த தண்டனை என்றால், பெரிய பாவங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை காத்திருக்கும் தெரியுமா?

Wednesday, 25 August, 2010

பகவானை அடையும் வழி?

த் விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஒருவித மனசாந்தியும், சந்தோசமும் ஏற்படுகிறது. அதுவும் பகவத் விஷயமென்றால், அதில் சிரத்தையும், அதை ரசிக்கக் கூடிய தன்மையும் இருந்தால் மிகவும் சிலாக்கியம் என்றனர்.
சொல்கிறவர்களும் மெய்யறிந்து சொல்வார்; கேட்பவர்களும் மெய்யறிந்து கேட்பர். இங்கு, மெய்மறந்து என்பது, குடும்பக் கவலையோ, மற்ற சிந்தனையோ இல்லாமல் ஒரு மணி, இரண்டு மணி நேரம் என மனம் அந்த விஷயத்திலேயே லயித்து விடுவது. இது எல்லாருக்குமே சாத்தியமாவதில்லை. எதெல்லாமோ ஞாபகம் வரும்; பாதியில் எழுந்து போய் விடுவர். பகவத் குணங்களை, புராணங்களை சொல்லும்படி பல இடங்களில் ஏற்பாடு செய்கின்றனர்; இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இஷ்டப்பட்டவர்கள் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். தட்டு எடுத்து வரும் போது ஒரு ரூபாயும் போடலாம்; ஒன்றும் போடாமல் கற்பூரத்தை கண்ணில் ஒற்றி கும்பிடு போட்டும் விடலாம்.

ஆனால், இங்கு ஒரு ரகசியம் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புராணத்தை யார் சொல்கின்றனரோ, சொல்லும்படி ஏற்பாடு செய்தனரோ, யார் கேட்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் பகவானின் அருள் கிடைக்கும். சகல நன்மைகளும் ஏற்படும் என்று பலன் சொல்வது வழக்கம். அதனால், இதுபோன்ற புராணங்களைக் கேட்க நிறைய கூட்டம் வரவில்லையே என்று ஏற்பாடு செய்தவர்களோ, கதை சொல்பவர்களோ சஞ்சலபடுவதில்லை.புண்ணியம் உள்ளவர்கள் வருகின்றனர் என்று தான் நினைப்பர்; அங்கு போகாதவர்களுக்கு தான் நஷ்டம்.

                  நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுகின்றனர். நாளை என்பது நிரந்தரமா? ஒவ்வொரு நாளும் ஏதாவதுஒரு புண்ணியத்தை சேர்த்து விட வேண்டாமா?மச்சினன் அமெரிக்காவுக்கு போய் வந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தால் என்ன புண்ணியம்?
சிரத்தையுள்ளவர்கள் குரு மூலமாக வேத சாஸ்திரங்களைக் கற்று, அனுஷ்டானம் செய்து, ஸ்திரமான ஞானம், வைராக்கியம், பக்தி இவைகளை அடைந்து பரமாத்மாவிடம் மனதை வைக்கின்றனர். ஒவ்வொன்றாக நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பரம பக்தன் என்ற நிலையை அடைகிறான். அதன்பின் அவனுக்கு எல்லாமே பிரம்மம் தான். இப்படிப்பட்ட பக்தர்களிடம் பகவானும் பிரியம் வைக்கிறான்;அவர்களுடைய இதயத்திலேயே வாசம் செய்கிறான். மனிதனுக்கு உள்ள காம, குரோதங்களை ஒழித்து அவனை  ஒரு சத்பாத்திரமாக செய்கிறான்;அவனும் ஒரு சாதுவாகி விடுகிறான்.
                    
அஞ்ஞானம் விலகி, ஞானம் உண்டாகி, பகவானே கதி, அவனே உண்மைப் பொருள் என்பதை பக்தனும்அறிந்து கொள்கிறான். இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் முக்திப் பெற்று பிறவி பிணியிலிருந்து விடுபடுகின்றனர். எத்தனை தடவை பிறப்பது? எத்தனை தடவை மரிப்பது? ஞானிகள் பிறவியை விரும்புவதில்லை. இதைப் புரிந்து கொண்டு அவன் வழி தேடினால் நல்லது.

Sunday, 15 August, 2010

பட்டினத்தார் அருளிய வாழ்க்கை தத்துவம். கேளுங்கள்.


Thursday, 12 August, 2010

எது பாவம், எது புண்ணியம்


எது பாவம், எது புண்ணியம் என்பதையே புரிந்து கொள்ளாமல் நாட்களைக் கழிக்கின்றனர் மக்கள். நாட்கள் செல்லச் செல்ல ஆயுள் குறைகிறதே! பார்த்துக் கொண்டே இருக்கும் போதே வெள்ளி விழா என்கிறான்,பொன் விழா என்கிறான், மணி விழா என்கிறான், வைர விழா என்கிறான்.
மாலை, மாலையாகப் போட்டு போட்டோ எடுத்து, அதைப் பார்த்து மகிழ்ந்து போகிறான். இத்தனைக் காலத்தில் செய்த பாவங்கள் எத்தனை, புண்ணியங்கள் எத்தனை என்று யோசிப்பதே இல்லை.

அனால், மேலே ஒருத்தன் இருக்கிறான்; அவனிடம் ஒரு கம்ப்யுட்டர் ரே உள்ளது. இவனது பாவ, புண்ணியங்கள் விநாடிக்கு விநாடி அங்கே பதிவாகி விடுகிறது. அங்கே போனதும் தான் அதைப் பார்கிறான். 'அடேயப்பா! இவ்வளவு பாவமா செய்திருக்கிறேன்? எனக்கு தெரியவே இல்லையே! ஹி...ஹி...ஹி.. என்று இளிக்கிறான். 'டேய், இளிக்காதே! இதற்கும் தண்டனை உண்டு;அனுபவித்து விட்டுப் போ..'என்று கழுத்தைப் பிடித்து நரகத்தில் தள்ளுவர். புண்ணியம் செய்தவன் பாடு பரவாயில்லை; நல்ல உலகத்துக்குப் போய் விடுவான்.

அதனால், வாழ்நாளில் சிந்திக்க வேண்டும். பெரியோர் என்ன சொல்லியிருகின்றனர், அறநூல்கள் என்ன சொல்கின்றன, யாரை அண்டினால் நற்கதி கிடைக்கும், என்ன செய்தால் தீவினைகள் தொலையும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும். நம்மை நல்வழிப் படுத்தி, கரை சேர்க்க பல சாதனங்கள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். " மூத்தோர் சொல் அமுதம்" என்றனர்; அதைக் கேட்க வேண்டும்.

மனிதனுக்கு உதவுவதற்காக மூன்றை சொல்லியுள்ளனர்; ஏணி, தோணி, புராணி! ஏணி, மனிதன் மேல போக உதவுகிறது; அனால், தான் இருத்த இடத்திலேயே இருந்து விடுகிறது. தோணி, தண்ணீரை தாண்டி அக்கரையில் மனிதனை சேர்த்து விடுகிறது; தான் மட்டும் தண்ணீரிலேயே இருக்கிறது. புராணி, பகவத் குணங்களைச் சொல்லி, பக்தர்களை பகவானிடம் சேர வழிகாட்டுகிறார்; அனால், அவர் மட்டும் இங்கேயே புராணம் சொல்லி கொண்டிருக்கிறார்.

'அட, சரி தான் போய்யா! நீயும் உன் வேதாந்தமும்! என்று சிலர் சொல்லலாம். வேதமும், வேதாந்தமும், சாஸ்திரமும் சொல்கிறதே... அதைக் கேட்டு, அதன் படி நடக்கலாமே! நல்லவர்கள் காட்டும் வழி நடப்பது நல்லது தானே!
- வைரம் ராஜகோபால்

Monday, 9 August, 2010

தலைக்கனம் பிடித்து அலைகிறீர்களா?


உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள் உள்ளன; அவைகளைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், வியக்கிறோம். ஆனாலும், இவைகளை விட பெரிய விசித்திரம் ஒன்றுள்ளது. நம் கண்களால் தினமும் காண்கிறோம்; ஆனால், அதைப் பற்றி சிந்திப்ப தில்லை!
மனிதன் பிறக்கும் போது, ஒன்றுமே இல்லாமல் பிறக்கிறான். அதன் பின்னர், எப்படியெல்லாமோ வாழ்க்கை நடத்துகிறான். படிக்கிறான், பட்டம் பெறுகிறான், ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான், புதிது புதிதாக ஏதோ கண்டுபிடிக்கிறான். பணம் சம்பாதிக்கிறான், புகழ் சம்பாதிக்கிறான், பாராட்டுக்கள் பெறுகிறான். மேலும், வீடு, வாசல், கார், பங்களா, மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் இவைகளையெல்லாம் கண்டு பேரானந்தப்படுகிறான்.

எல்லார் மீதும் அன்பைப் பொழிகிறான். மனைவி, மக்கள், சுற்றத்தார் என்று மட்டுமில்லை... அவன் வீட்டு நாய், தென்னை மரம், வாழை மரம் முதலியவைகளின் மீதும் அன்பு செலுத்துகிறான். தினமும் பார்த்துப் பார்த்து ஆனந்தப்படுகிறான். ரொம்ப சரி... எத்தனை காலத்துக்கு இப்படி ஆனந்தப்படுகிறான்? அவனது வாழ்நாள் முழுவதும் ஆனந்தப்படுகிறான்!
இப்படி எவ்வளவு காலத்துக்கு இவைகளை அனுபவித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று சிந்திப்பதே இல்லை. ஏதோ கலியுகம் முடியும் வரை இப்படியே இருக்கப் போவதாக எண்ணம். இவன் எண்ணம் இப்படி இருக்கலாம். ஆனால், விதி என்பது எப்படி இருக்கும்? அது தான் தெரியாது! ஏதோ ஒரு நாள் படுத்துத் தூங்கியவன் எழுந்திருப்பதில்லை; ஒரு வாய் காபி குடித்தவன், அடுத்த வாய் காபி குடிப்பதில்லை; வெளியே சென்றவன் திரும்பி வருவதில்லை. யாரோ தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் போடுகின்றனர். வைத்தியர் வந்து பார்த்து கையை விரித்துவிட்டுப் போகிறார்.

ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றால், யாரிடமும் சொல்லிக் கொள்வதுமில்லை; உத்தரவு கேட்டுக் கொள்வதுமில்லை; எந்த இடத்துக்குப் போகிறான் என்று சொல்வதுமில்லை. எங்கிருந்தோ வந்தான், எங்கேயோ போனான். எங்கே போனான்?
போன இடம் இருப்பவர்களுக்குத் தெரியாது; போனவனுக்கும் எங்கிருந்து வந்தோம் என்று தெரியாது; போகுமிடமும் தெரியாது. மீண்டும் ஒரு ஜென்மம்.

இது தான் பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலன். பாவமும் வேண்டாம், புண்ணியமும் வேண்டாம், பிறவியும் வேண்டாம் என்று சும்மா இருக்க முடிகிறதா? எதையோ செய்கிறான். புண்ணிய காரியமாகவே இருந்தாலும் புண்ணியத்தை அடைகிறான். அதன் பலனை அனுபவிக்க மீண்டும் பிறவி! அடக்கடவுளே மீண்டும் பிறவியா? வேண்டாம் என்றால் என்ன செய்வது? எந்த புண்ணிய காரியம் செய்தாலும், அதன் பலனை ஈசுவரார்ப்பணம் செய்து விடு என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது தானே நற்கதி கிடைக்கும்.
உலகில், என்னுடையது, நான் என்ற அகம்பாவம் உள்ள வரையில்,விமோசனம் இல்லை. பிறப்பு, இறப்பு, பாசம், பந்தம் எல்லாம் இருக்கும். ஆனால், ஆசை விடுகிறதா? இதுவல்லவோ பெரிய விசித்திரம்!

Tuesday, 3 August, 2010

துறவு


இந்த யுகத்தில், துறவறம் என்பதற்கு இல்லற துறவறமே சிறந்ததாகும். கிண்டலாய் சொன்னால், எல்லோரும் துறவி ஆகி விட்டால், பிறகு அவர்களுக்கு யார் தான் சோறு போடுவது. ஒரு இல்லறத்தை துறந்த துறவியை எடுத்துக் கொள்வோம். அத் துறவியானவர் காட்டிற்க்கோ, அல்லது ஒரு மடத்திலே சேர்ந்து துறவறம் பூண்டு தியானம், யோகம் முதலியவற்றால் ஞான நிலையை அடைந்தால் அது பெரும்பாலும் தன்னோடு முடிந்து விடுகிறது. அது தன்னுடய முக்தி நிலைக்கு கொண்டு செல்லும். பிறருக்கும் உபதேசம் செய்வார். இதில் இவர் தனக்கும் சமுதாயத்திற்கும் செய்த தொண்டில் மிக அதிக பங்கு, அவருக்கே அதிகம் இருக்கும். அனால்,

ஒரு இல்லறதுறவி,அதாவது சம்சார யுகத்தில் இருந்து கொண்டே துறவறம் மேற்கொள்வது, அவரால் இந்த சமுதாயத்திற்கே தொண்டின் பங்கு அதிகம். ஒரு கணவன் மனைவி குடும்பத்தில் இல்லற துறவறம் மேற்கொண்டால் அந்த குடும்பத்திலே இன்பம் நிறைந்து இருக்கும். இதில் துறவறம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் உணர்ச்சியின் வழியில் செல்லாமல், அறிவின் வழியில் செல்வது. நல்லறம் செய்வது. தர்மத்தை செய்வது. ஆசைகளை ஒழிக்க வேண்டாம்/முடியாது, "ஆசைகளை சீரமைப்பது". இதையே ஞான மார்க்கம் என்றும் பொருள் கொள்ளலாம். இதனால் விளைவது நல்லொழுக்கமே! அவர்கள் யாரை பார்த்தும் பொறாமை கொள்ளமாட்டார்கள், சினம் கொள்ள மாட்டார்கள், உள்ளத்தில் எப்பொழுதுமே மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். கணவன் மனைவி பண்பட்டு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் நன் மக்களாய் இருப்பார்கள். அவர்களால் சமுதாயத்திற்கே மிகப் பெரும் நன்மை உண்டு. அவர்கள் ஒழுக்கத்தின் மறு உருவமாய் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தர மாட்டார்கள், துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். ஆனந்தத்திலே பேரானந்தம் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வது தான். இதுவே பேரானந்தம்.

இதை காட்டிற்கு தான் சென்று பெறத்தேவையில்லை. இல்லறத்தில் இருந்தே தியானம், யோகம் முதலியவற்றின் உதவியால் நிச்சயம் இந்த நிலையை அடையலாம். கணவன் மனைவி சேர்ந்து செய்யும் தர்மமே சிறந்தது. இதற்காக தான் இறைவன் ஆணையும், பெண்ணையும் சேர்த்து படைத்திருக்கிறான். முதலில், ஒரு பெண்ணை பார்த்தால், தங்கையாகவோ, தாயாகவோ பாவிக்கும் மனநிலை வேண்டும். மக்களின் மனநிலையில் துறவி என்பவன் காவி உடுத்தி, கழுத்தில் மாலை அணித்து, சிரிக்காமல், எந்நேரமும் மந்திர ஜெபம் செய்து கொண்டே, பெண்ணை ஏறெடுத்து பார்க்காமல், சாந்தமாக இருப்பதையே நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஒரு துறவியானவன், தன்னை சுற்றயுள்ள போலிகளை துறந்து, ஆசைகளை சீரமைத்து அறிவின் விழியில் நிற்பவனே யாவன். இதை T SHIRT , Jeans அணித்து கொண்டும் உணரலாம். புலன்கள் வழியில் வரும் இன்பம் நிலையற்றது என்பது புரியும். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி பிறருக்கு கொடுத்து உதவுவதில் தான் இருக்கிறது என்பது புரியும். இதையே கர்ம யோகம் என்றும் கூறலாம்.