நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Wednesday, 25 August, 2010

பகவானை அடையும் வழி?

த் விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஒருவித மனசாந்தியும், சந்தோசமும் ஏற்படுகிறது. அதுவும் பகவத் விஷயமென்றால், அதில் சிரத்தையும், அதை ரசிக்கக் கூடிய தன்மையும் இருந்தால் மிகவும் சிலாக்கியம் என்றனர்.
சொல்கிறவர்களும் மெய்யறிந்து சொல்வார்; கேட்பவர்களும் மெய்யறிந்து கேட்பர். இங்கு, மெய்மறந்து என்பது, குடும்பக் கவலையோ, மற்ற சிந்தனையோ இல்லாமல் ஒரு மணி, இரண்டு மணி நேரம் என மனம் அந்த விஷயத்திலேயே லயித்து விடுவது. இது எல்லாருக்குமே சாத்தியமாவதில்லை. எதெல்லாமோ ஞாபகம் வரும்; பாதியில் எழுந்து போய் விடுவர். பகவத் குணங்களை, புராணங்களை சொல்லும்படி பல இடங்களில் ஏற்பாடு செய்கின்றனர்; இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இஷ்டப்பட்டவர்கள் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். தட்டு எடுத்து வரும் போது ஒரு ரூபாயும் போடலாம்; ஒன்றும் போடாமல் கற்பூரத்தை கண்ணில் ஒற்றி கும்பிடு போட்டும் விடலாம்.

ஆனால், இங்கு ஒரு ரகசியம் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புராணத்தை யார் சொல்கின்றனரோ, சொல்லும்படி ஏற்பாடு செய்தனரோ, யார் கேட்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் பகவானின் அருள் கிடைக்கும். சகல நன்மைகளும் ஏற்படும் என்று பலன் சொல்வது வழக்கம். அதனால், இதுபோன்ற புராணங்களைக் கேட்க நிறைய கூட்டம் வரவில்லையே என்று ஏற்பாடு செய்தவர்களோ, கதை சொல்பவர்களோ சஞ்சலபடுவதில்லை.புண்ணியம் உள்ளவர்கள் வருகின்றனர் என்று தான் நினைப்பர்; அங்கு போகாதவர்களுக்கு தான் நஷ்டம்.

                  நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுகின்றனர். நாளை என்பது நிரந்தரமா? ஒவ்வொரு நாளும் ஏதாவதுஒரு புண்ணியத்தை சேர்த்து விட வேண்டாமா?மச்சினன் அமெரிக்காவுக்கு போய் வந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தால் என்ன புண்ணியம்?
சிரத்தையுள்ளவர்கள் குரு மூலமாக வேத சாஸ்திரங்களைக் கற்று, அனுஷ்டானம் செய்து, ஸ்திரமான ஞானம், வைராக்கியம், பக்தி இவைகளை அடைந்து பரமாத்மாவிடம் மனதை வைக்கின்றனர். ஒவ்வொன்றாக நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பரம பக்தன் என்ற நிலையை அடைகிறான். அதன்பின் அவனுக்கு எல்லாமே பிரம்மம் தான். இப்படிப்பட்ட பக்தர்களிடம் பகவானும் பிரியம் வைக்கிறான்;அவர்களுடைய இதயத்திலேயே வாசம் செய்கிறான். மனிதனுக்கு உள்ள காம, குரோதங்களை ஒழித்து அவனை  ஒரு சத்பாத்திரமாக செய்கிறான்;அவனும் ஒரு சாதுவாகி விடுகிறான்.
                    
அஞ்ஞானம் விலகி, ஞானம் உண்டாகி, பகவானே கதி, அவனே உண்மைப் பொருள் என்பதை பக்தனும்அறிந்து கொள்கிறான். இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் முக்திப் பெற்று பிறவி பிணியிலிருந்து விடுபடுகின்றனர். எத்தனை தடவை பிறப்பது? எத்தனை தடவை மரிப்பது? ஞானிகள் பிறவியை விரும்புவதில்லை. இதைப் புரிந்து கொண்டு அவன் வழி தேடினால் நல்லது.

1 comment:

Thilaga .I said...

அற்புதமான படைப்பு..
அதனுடன் கருணை முகமுடைய ஸ்ரீ ராமர் படம் சேர்த்திருப்பது மிகவும் அழகு..

//அஞ்ஞானம் விலகி, ஞானம் உண்டாகி, பகவானே கதி, அவனே உண்மைப் பொருள் என்பதை பக்தனும்அறிந்து கொள்கிறான்//
அற்புதமான வரிகள்..
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த உண்மை ஒருநாள் புரிந்துவிடும்...

Post a Comment