நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Tuesday, 28 September, 2010

தனிமை!

மனித வாழ்க்கையில் கடமை என்று சொல்லப் படும் பல காரியங்களும், பொழுதுபோக்கு காரியங்களும் அடங்கும். பொழுது போக்காக செய்யும் காரியங்களால் பயன் ஏதுமிராது. கடமைக்காக செய்யும் காரியங்களில், குடும்பம், பந்துக்கள், நண்பர்கள் இவர்களுடைய மேம்பாட்டுக்காக செய்யப் படும் காரியங்கள் ஒரு வகை; தன்னுடைய மேம்பாட்டுக்காக செய்யும் காரியங்கள் மற்றொரு வகை.

இதிலும் தான் பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும், உன்னத நிலையிலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் காரியங்கள் ஒரு வகை; தெய்வ சிந்தனை, வழிபாடு, பக்தி போன்றவற்றின் மூலமாக பிறவிப் பிணியை போக்குவதற்கான மார்க்கங்களில் ஈடுபட்டு, ஞானம் பெற்று, ஜென்மா கடைதேறுவதற்கு வேண்டிய காரியங்களை செய்வது இன்னொரு வகை. ஆனால், வாழ்க்கையில் மனிதன் கடைத்தேறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் அதாவது, எதைச் செய்தால் இந்தப் பிறவி பிணியை போக்கலாமோ அதைத் தள்ளிப் போடுகிறான்; அதை செய்யாமலே போய் விடுகிறான். 
ஆக, இந்த ஜென்மம் எடுத்ததற்கு என்ன பயன் என்றால், யார், யாருக்காகவோ பாடுபட்டு சம்பாதித்து விட்டு போய் விடுகிறான். இப்படி எத்தனை ஜென்மாவில் செய்து கொண்டிருப்பது...... விடிவு தான் எப்போது?
                                      கடமையையும் செய்ய வேண்டும்; தான் உய்யும் வழியையும் தேட வேண்டும். இதற்கு, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின், உடலில் சக்தி இருக்கும் போதே, பகவானை அடையும் வழியைத் தெரிந்து, அதன் வழி நடக்க வேண்டும். குடும்ப பந்தத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல பற்றும், படாமலும் இருக்க வேண்டும். இதற்கு சில வழிமுறைகளை சொல்லி இருகின்றனர். சித்த சுத்தியோடு, மனதை ஒருமுகப்படுத்தி, ஏகாந்தத்தில் அமர்ந்து , பகவானை நினைத்து, மந்திரங்களால் ஜெபித்து, அவனருள் பெற வேண்டும். இதில் ஏகாந்தம் என்பது ஒரு முக்கிய அம்சம். கடவுளைக் குறித்து தியானம் செய்வதற்கு, இடையூறுகள் இல்லாத தனியிடம் மிக அவசியம். இப்படி தனிமை ஏறப்பட்ட பிறகு தான் மனதை ஒருமுகப்படுத்துதல், புலனை அடக்குதல்,இதெல்லாம் சாத்தியமாகும்.

                                                            பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்கு சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். ' எங்கே போகிறாய்? எதற்காக போகிறாய்?' என்று கேட்டு விட்டு,' தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே, இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்கு போ!...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், ' தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!..' என்று பிடிவாதமாக சொன்னான் துருவன்.   துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார், நாரதர். 'இனி, நீ, தவம் செய்ய ஆரம்பிக்கலாமே! .... என்றார் நாரதர்.

                                                              'அது சரி... நான் ஆரம்பிக்கிறேன், அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!" என்றான் துருவன். 'ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர். 'தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசிதீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்கு தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கரீர்கள் என்று  என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்! ' என்றான் துருவன்.நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும், விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்து சென்று விட்டார்.
                                                        தியானம், தவம் இவைகளுக்கு முக்கியமானவை தனிமை! இடம் கிடைப்பது தான் சிரமமாக இருக்கிறது.

Monday, 27 September, 2010

துஷ்டனைக் கண்டால் தூர விலகு

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்தப் பக்கமாக தேரில் வந்தான். தர்மர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் தெருவில் நடக்க வேண்டும்? இதுபற்றி அவன் தர்மரிடமே கேட்டு விட்டான். ""அண்ணா! நம்மைப் போன்றவர்கள் தெருவில் நடக்கலாமா? நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் தந்தும் நீ நடந்து செல்கிறாயே! இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ?'' என்றான்.தர்மர் அவனிடம்,""தம்பி! நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை  தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு தெருவாக நடந்தால் தான், நமது நாட்டின் நிலைமை, மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்,'' என்றதும், துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது.""நாடாளப் போவது நானல்லவா! அப்படிப் பார்த்தால் நானல்லவா நடந்து செல்ல வேண்டும், இவன் ஏன் நடக்கிறான்? சரி...சரி...இவனைப் போலவே நாமும் நடப்போம்,'' என தேரில் இருந்து குதித்தான்.மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும், அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம், இவனும் கவனித்துப் பார்த்தான்.ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன், ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். தர்மருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.""சே...இவனெல்லாம் ஒரு மனிதனா! இவனது காலில் ஒரு முள் குத்தினால் "ஆ'வென அலறுகிறான். ஆனால், இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு
கரகரவென நறுக்குகிறான். ஐயோ! அதன் அவலக்குரல் இவனது காதுகளில் விழத்தானே செய்கிறது! இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா?' ' என்று அவனை மனதுக்குள் திட்டியபடியே நடந்தார்.
அப்போது, அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன.
""ஐயோ! தவறு செய்துவிட்டோமே! இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும், மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும், நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு, தர்மத்தையும் பாதுகாக்கிறான்.  அப்படியானால், இவனைப் பற்றிய தப்பான அபிப்ராயம் என் மனதில் ஏன் ஏற்பட்டது? நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே!'' என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.நிஜத்தில் நடந்தது என்ன தெரியுமா?இவர் தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால், துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட குணம் காற்றில் பரவி, தர்மரையும் பாதித்து விட்டது. இதனால் தான் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்றார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ...அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுமாம்! அதனால் தான் அப்படி ஒரு பழமொழியே வந்தது. இனியேனும், நல்லவர்களுடன் மட்டும் சேர்க்கை வைத்துக் கொள்வீர்கள் தானே!

Friday, 24 September, 2010

கடவுளும் விதிவிலக்கல்ல ! - ஆன்மிக கதை

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரது முதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். தேவலோகத்திலும் இப்படி நடப்பதுண்டு. தம்பதிகளை சிவபார்வதி கைலாயத்துக்கு  அழைத்தனர். பூமாதேவி வர மறுத்துவிட்டாள்.
 ""அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் "அசலா'.  அதாவது, இருந்த இடத்தை விட்டு நகராதவள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். நீங்கள் திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,'' என்று அனுப்பி விட்டாள்.
பெருமாளுக்கு வருத்தம். மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ""ஆத்துக்காரி வரலையா?'' என்று கேட்பார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். இந்த பூமாதேவி அசையவே மாட்டாள். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார்.
அவளோ வீட்டிலேயே இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், "எங்காவது போயிருக்கிறாள்' என்றே பதில் கிடைக்கும்.
அவளோ அசைய மறுக்கிறாள், இவளே ஓடிக்கொண்டே இருக்கிறாள். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடினார். ஆனால், அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.
பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். ""உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக்கண்ணைத்
திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான்,'' என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், ""சுவாமி! இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன்,'' என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், யாராக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் துன்பம் வந்தால் கலங்காதீர்கள். அதையும் ரசித்து அனுபவிக்கும் பக்குவ நிலையைப் பெறுங்கள்.

Friday, 17 September, 2010

எது உண்மையான சுகம்?

மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான் என்பது தெரியும். இந்த வாழ்நாளை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அதற்கு தகுந்த படி வாழ்க்கையை  அமைத்துக் கொள்ள வேண்டும்.
                                எது பயனுள்ளது, எது பயனற்றது என்பதை பெரியோர் கூறியிருகின்றனர். தனக்கு தேவையானதை தார்மீக முறையில் சம்பாதிக்க வேண்டும். குடும்ப தேவை, தெய்வீக காரியங்கள், சொந்த பந்தங்களுக்கு உதவி செய்தல், ஓரளவு தான, தர்மம் செய்தல், போதுமே என்கிற திருப்தி....இப்படி வாழ்க்கை நடத்தினால் இகத்துக்கும் சுகம், பரத்துக்கும் சுகம் என்றனர். இப்படி இருக்க முடியா என்பது தான் பிரச்னை.
                           முதலாவதாக 'இது போதும்!..., என்ற எண்ணம் வருகிறதா? பணம், பொருள் என்று வரும் போது, ' இது போதும்... இனி வேண்டாம்....'   என்ற பேச்சே இருப்பதில்லை. வேலைக்குப் போனால் சம்பளம் போதாது. வாடகை வீடென்றால், சொந்தவீடிற்கு ஆசை; சொந்த வீடு இருந்தால், இன்னும் கொஞ்சம் பெரிய வீடு மேல் ஆசை; பெரிய வீடாக இருந்தால், மாடி வீடாக இருந்தால் வாடகைக்கு விடலாமே என்ற ஆசை.
                                  சைக்கிள் மேல் ஆசை. பிறகு ஸ்கூட்டர், கார் இப்படி ஒவோவேன்றாக ஒவ்வொவென்றாக ஆசை! இதற்கு வரம்பே கிடையாது. ' ஆமாம் சார்....ஏதோ இருக்கறதை வெச்சுக்குட்டு இதுவே போதும்னு உட்கார்ந்திருந்தால் அது என்ன வாழ்க்கை.. சார். இந்த வாழ்நாளில் நாலு பேரைப் போல் நாமும் நிறைய சம்பாதித்து, நன்றாக அனுபவிக்க வேண்டாமா... அப்படி ஆசை இராதா?' என்று கேட்கின்றனர். ஆனால், வாழ்கையில் எது சுகம், நிம்மதிஎன்பதை கொஞ்சம்  சிந்தித்துப் பார்த்தால் புரியும். நிறைய பணம் இருந்தாலும் திருடர் பயம், வருமான வரி பயம்; கடன் கொடுத்திருந்தாலும் வருமோ, வராதோ என்ற பயம்; இதுவும் தவிர, யாரவது சொந்தங்கள் உதவி கேட்டு வந்து விடுவாரோ என்ற பயம்.
                                             பின்னே சேர்த்து வைத்ததை என்ன தான் செய்வது? என்ன செய்தால் திருப்தி, நிம்மதி ஏற்படும்? ஓரளவு பொருள் சேர்க்க வேண்டியது. குடும்பத்தை ஒழுங்காக நடத்தி, அதற்காக செலவிடுவது, பிறருக்கு உதவுவது, தன இகலோக சுகத்துக்கு செலவிடுவதைப் போல, பரலோக சுகத்துக்கும் ஏதாவது செய்து கொள்வது நன்மை தரும் என்றனர்.பரலோக சுகத்துக்கும் என்ன செய்ய வேண்டும்? தான, தர்மம் தான் வழி!
பெரியோர் சொன்னதையும் கேட்டு, புராணங்களில் சொல்லி இருப்பதையும்  நம்பித் தான், தனக்கான தான, தர்மங்களுக்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
                      இதற்கு மனசு வராமல் போனால், உறவினர்கள் போன்றவர்களால் அந்தப் பணம் அழியத் தான் போகிறது. ஆளுக்கு கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் அங்கே என்ன இருக்கும். சண்டை, சச்சரவு, மனஸ்தாபம் இருக்கும். இதற்காகவா இதனை பாடு பட்டு சேர்த்து வைத்தது!......
கடமைக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதும். பரலோகத்துக்கு வேண்டியதை செய்து கொள்ளலாம். மறக்கக் கூடாது, இப்படி வாழலாமே!..என்றனர் மகான்கள். நமக்கு அது புரிய வேண்டுமே!

Thursday, 9 September, 2010

அகம் பாவம், தற்பெருமை கூடாது!

பூர்வ ஜென்மத்தில் செய்த நன்மை தீமைகளை பொறுத்து, தன் வாழ்நாளில் சில நல்ல காரியங்களை செய்து பெயரும், புகழும் பெறுகிறான் மனிதன். ஒருவன் எவ்வளவோ தான, தர்மங்களை செய்யலாம் ; பரோபகாரியாக இருக்கலாம்.இதெல்லாம் அவனுக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். ஆனால், தான் செய்துள்ள தான, தர்மங்களைப் பற்றி பிறரிடம் தானே, பெருமையாகப் பேசிக் கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொள்வது, அவன் செய்துள்ள தான, தர்மத்தின் பலனை கெடுத்து விடும்.
யயாதி என்ற சக்கரவர்த்தி, பூலோகத்திலும், தேவலோகத்திலும் புகழ் பெற்றவன்; பல யாகங்களை செய்தவன்; சாதுக்களை ஆதரித்தவன். கடைசிக் காலத்தில் ராஜ்யத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்து முக்தி பெற்றான். தேவலோகத்தில் இந்திரனாலும், தேவர்களாலும் கவுரவிக்கப் பட்டான்.ஒரு தேவ விமானத்தை யயாதிக்கு அளித்து, "உன் இஷ்டம் போல் எந்த புன்னியலோகதுக்கும் இதன் மூலம் செல்லலாம். தேவலோக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்..' என்றான் தேவேந்திரன்.
                                                                                         யயாதியும் அந்த விமானத்தில் ஏறி,எல்லா புன்னியலோகங்களுக்கும் சென்று, எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு இருந்தான். எல்லா புன்னியசாலிகளுக்கும் மேம்பட்டவன் தான் தான்' என எண்ணிக் கொண்டான். யயாதியிடம் அகம்பாவம் ஏற்பட்டிருப்பதை அறிந்த தேவேந்திரன்,' ஒ யயாதியே... நீ எல்லா கர்மங்களை குறைவின்றி பூர்த்தி செய்து , இல்லறத்தை துறந்து, தவம் செய்து புன்னியலோகங்களை ஜெயித்தாய். "தவத்தில் நீ யாருக்கு ஒப்பானவன்?" என்று கேட்டான்.யயாதிக்கு தற்பெருமை தலை தூக்கியது.
                                                                                         'இந்திரனே, தேவர்களிலும், மனிதர்களிலும், கந்தவர்களிலும், ரிஷிகளிலும் தவத்தில் எனக்கு ஒப்பானவர்கள் யாருமே கிடையாது'....என்றான். உடனே இந்திரன் ,'' ராஜனே.. சமமானவர்களையும், மேலானவர்களையும், அவர்களின் மகிமையை அறியாமலே நீ அவமதித்துப் பேசி விட்டாய், உன் அகம் பாவம் உன் புண்ணியத்தை அழித்து விட்டது.... நீ இப்போதே கீழே தள்ளப் பட்டு விழுவாய்..." என்றான். தன் தவற்றை உணர்ந்த யயாதி, தண்டனையை ஏற்கத் தயாரானான். இந்திரனைப் பார்த்து,' நான் அகம்பாவத்தால், அவர்களை நான் அவமதித்தால் எனக்கு புன்னியலோகங்கள் நஷ்டமாகிறது. நான் தேவலோகத்தை விட்டு கீழே விழும் போது, 'சாதுக்களின் நடுவே விழும்படியாக செய்வாயாக..' என்று வேண்டிக் கொண்டான்.
                                                                                         அதேபோல், பூலோகத்தில் கங்கை நதி தீர்த்தத்தில் சாதுக்கள் யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில விழுந்து, சாதுக்களின் தரிசனம் பெற்றான் யயாதி. அவனது பெண் மகா தபஸ்வி. அவள் தன புண்ணியம் அனைத்தும் யயாதிக்கு அளித்தாள். அதன் பலனாக மீம்டும் தேவவிமானத்தில் புன்னியலோகம் சென்றான் யயாதி. நல்ல காரியங்களை செய். புண்ணியம் சம்பாதித்துக் கொள். புன்னியலோகங்களை ஜெயித்துக்கொள். அனால், தற்பெருமையும், அகம்பாவமும் வேண்டாம். இவைகளை விட்டு விட்டால், ஒருவன் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.

Saturday, 4 September, 2010

கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!

ஒரு கிராமத்துக்கு ஒரு பரதேசி வந்தார். அவர் வீடு வீடாகப் போய் பிச்சை கேட்பார்.
ஒருநாள் ஒரு வீட்டின் பெண்மணி, ஏம்ப்பா...உனக்கு கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சாப்பிட்டா என்னவாம்? என்று கடுமையாகப் பேசி விட்டாள். பரதேசிக்கு வருத்தம். அவருக்கு ரோஷம் வந்து விட்டது. தன்னைத் திட்டிய அந்த ஊரார் முன், தான் ஒரு கடும் உழைப்பாளி என்பதைக் காட்ட ஒரு காலியிடத்தில் பூந்தோட்டம் போட்டார். கோயில்கள் மிகுந்த அந்த ஊரில் பூக்களை விற்று சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டார். ஆங்காங்கே கிடந்த பூங்குச்சிகளை ஒடித்து குழி தோண்டி நட்டார். அருகிலேயே ஒரு கால்வாய் ஓடியது. அதில் இருந்து தண்ணீர் எடுத்து, செடிகளில் ஊற்ற குடம் இல்லை.
                              ஒரு குயவனிடம் சென்று, எனக்கு இலவசமாக ஒரு குடம் தா. என் தோட்டத்து பூக்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நான் பரதேசி. காசு இல்லை, என்றார். இவர் பரதேசி என்றால், அவன் வடிகட்டிய கஞ்சன். இருந்தாலும் இல்லை என சொல்லாமல் அப்போதைக்கு தட்டிக் கழிப்பதற்காக, நாளை வாரும், குடம் தருகிறேன், என சொல்லி அனுப்பிவிட்டான். அவர் அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக அங்கு போய் நின்றார். அன்றும் நாளை வாரும், குடம் தயாராகவில்லை, என சொல்லி அனுப்பி விட்டான். மறுநாளும் போனார். இப்படியே பலநாள் போனார்.

பத்து மாதங்களாக தொடர்ந்து ஒரே பதிலே கிடைத்தது. அதுவரை தென்னை மட்டையில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியும், கொட்டாங்கச்சிகளில் தண்ணீர் எடுத்தும், தன் மேல் துண்டை தண்ணீரில் நனைத்து அதைக் கொண்டு வந்து பிழிந்தும் செடிகளை ஓரளவு காப்பாற்றி வைத்திருந்தார் பரதேசி. ஒருநாள் பரதேசியின் தொல்லை தாங்காமல் ஒரு மண்குடத்தை கொடுத்துவிட்டான். பரதேசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். தற்செயலாக கை நழுவ குடம் கீழே விழுந்து உடைந்தது. வருத்தத்துடன் தோட்டத்துக்கு திரும்பிய பரதேசி ஒரு சித்தரைப் பார்த்தார். நடந்ததைச் சொன்னார். சித்தர் அவரிடம், ஒவ்வொரு மனிதனும் பத்துமாதம் தாயின் கருவில் இருந்து, பிறக்கும் போது பரதேசியாக ஆடை கூட இல்லாமல் தான் வருகிறான்.  இங்கே வந்ததும் பாட்டு, கூத்து, செல்வம், ஆடை, அணிகலன் என்ற மாயைக்குள் சிக்கி, ஆடாத ஆட்டம் ஆடுகிறான். உயிர் பிரிந்ததும், நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த குடத்தை கீழே போட்டு உடைத்தது போல, எல்லாவற்றையும் இழந்து, அதே நிர்வாணத்துடன் வந்த இடம் திரும்புகிறான், என்றார். பரதேசி வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் ஆசைகளைத் துறந்து தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.