நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Tuesday 28 September, 2010

தனிமை!

மனித வாழ்க்கையில் கடமை என்று சொல்லப் படும் பல காரியங்களும், பொழுதுபோக்கு காரியங்களும் அடங்கும். பொழுது போக்காக செய்யும் காரியங்களால் பயன் ஏதுமிராது. கடமைக்காக செய்யும் காரியங்களில், குடும்பம், பந்துக்கள், நண்பர்கள் இவர்களுடைய மேம்பாட்டுக்காக செய்யப் படும் காரியங்கள் ஒரு வகை; தன்னுடைய மேம்பாட்டுக்காக செய்யும் காரியங்கள் மற்றொரு வகை.

இதிலும் தான் பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும், உன்னத நிலையிலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் காரியங்கள் ஒரு வகை; தெய்வ சிந்தனை, வழிபாடு, பக்தி போன்றவற்றின் மூலமாக பிறவிப் பிணியை போக்குவதற்கான மார்க்கங்களில் ஈடுபட்டு, ஞானம் பெற்று, ஜென்மா கடைதேறுவதற்கு வேண்டிய காரியங்களை செய்வது இன்னொரு வகை. ஆனால், வாழ்க்கையில் மனிதன் கடைத்தேறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் அதாவது, எதைச் செய்தால் இந்தப் பிறவி பிணியை போக்கலாமோ அதைத் தள்ளிப் போடுகிறான்; அதை செய்யாமலே போய் விடுகிறான். 
ஆக, இந்த ஜென்மம் எடுத்ததற்கு என்ன பயன் என்றால், யார், யாருக்காகவோ பாடுபட்டு சம்பாதித்து விட்டு போய் விடுகிறான். இப்படி எத்தனை ஜென்மாவில் செய்து கொண்டிருப்பது...... விடிவு தான் எப்போது?
                                      கடமையையும் செய்ய வேண்டும்; தான் உய்யும் வழியையும் தேட வேண்டும். இதற்கு, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின், உடலில் சக்தி இருக்கும் போதே, பகவானை அடையும் வழியைத் தெரிந்து, அதன் வழி நடக்க வேண்டும். குடும்ப பந்தத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல பற்றும், படாமலும் இருக்க வேண்டும். இதற்கு சில வழிமுறைகளை சொல்லி இருகின்றனர். சித்த சுத்தியோடு, மனதை ஒருமுகப்படுத்தி, ஏகாந்தத்தில் அமர்ந்து , பகவானை நினைத்து, மந்திரங்களால் ஜெபித்து, அவனருள் பெற வேண்டும். இதில் ஏகாந்தம் என்பது ஒரு முக்கிய அம்சம். கடவுளைக் குறித்து தியானம் செய்வதற்கு, இடையூறுகள் இல்லாத தனியிடம் மிக அவசியம். இப்படி தனிமை ஏறப்பட்ட பிறகு தான் மனதை ஒருமுகப்படுத்துதல், புலனை அடக்குதல்,இதெல்லாம் சாத்தியமாகும்.

                                                            பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்கு சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். ' எங்கே போகிறாய்? எதற்காக போகிறாய்?' என்று கேட்டு விட்டு,' தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே, இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்கு போ!...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், ' தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!..' என்று பிடிவாதமாக சொன்னான் துருவன்.   துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார், நாரதர். 'இனி, நீ, தவம் செய்ய ஆரம்பிக்கலாமே! .... என்றார் நாரதர்.

                                                              'அது சரி... நான் ஆரம்பிக்கிறேன், அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!" என்றான் துருவன். 'ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர். 'தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசிதீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்கு தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கரீர்கள் என்று  என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்! ' என்றான் துருவன்.நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும், விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்து சென்று விட்டார்.
                                                        தியானம், தவம் இவைகளுக்கு முக்கியமானவை தனிமை! இடம் கிடைப்பது தான் சிரமமாக இருக்கிறது.

No comments:

Post a Comment