நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Sunday, 26 December, 2010

உயிர்மெய்

பிறப்பு என்பது ஒரு தமிழ்ச் சொல். அது ஓர் உயிரானது உடலோடு சேர்ந்து உலகத்துக்கு வருவதைக் குறிக்கின்றது.
இறப்பு என்பது இன்னொரு தமிழ்ச் சொல். அது இந்த உலகத்தில் உடலோடு சேர்ந்து வாழ்ந்த உயிர், உடலை விட்டு பிரிந்து போவதைக் குறிக்கின்றது.
பிறப்பின் தன்மையையும் இறப்பின் தன்மையையும் இந்த இரு தமிழ்ச் சொற்கள் குறிப்புட்டு காட்டுவதைப் போல பிற மொழியில் உள்ள அதற்கு நேரான சொற்கள் குறிப்பிடுபவனாக இல்லை. பிறப்பு, இறப்பு என்னும் சொற்களில் உள்ள எழுத்துக்களில் முதல் எழுத்தைத் தவிர மற்ற மூன்று எழுத்துக்களும் ஒன்றாகவே உள்ளன.
             
பிறப்பு என்பதில் உள்ள முதல் எழுத்து "பி" இது ஓர் உயிர் மெய் எழுத்து. அதாவது உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து பிறக்கின்ற எழுத்து.
 'ப்' என்பது மெய்யெழுத்து 'இ' என்பது உயிர் எழுத்து. இரண்டும் சேர்கின்ற பொழுது ப் + இ = பி என்று ஆகிறது.

             உலகத்தில் உடலும் உயிரும் சேர்ந்து பிறப்பதைக் குறிக்கின்ற சொல்லில் உள்ள 'பி' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.

பி - என்னும் உயிர்மெய் எழுத்திலிருந்து 'ப' என்னும் மேய்யேளுத்தை நீக்கிவிட்டால், விட்டு விட்டால், தனித்து நிர்ப்பது 'இ' என்னும் உயிர் எழுத்து.
             உடலை விட்டுப் பிரிந்து உயிர் தனித்து நிற்கின்ற நிலைதானே இறப்பு என்பது! இறப்பு என்னும் சொல்லில் உள்ள 'இ' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.
            உயிர் உடலோடு சேர்வது 'பிறப்பு'
            உயிர் உடலை விட்டுப் பிரிவது 'இறப்பு'
         
மெய் என்றால் உடல், மெய்யெழுத்து என்றால் உடல் போன்ற எழுத்து. புள்ளி உள்ள எழுத்து உயிரோடு சேராத உடல் தனித்து இயங்க முடியாது.
  நிற்கவும் முடியாது. இந்த உண்மையைக் காட்டுவது போலத்தான் மெய்யெழுத்து மொழிக்கு முதலில் ஒரு சொல்லின் முதலில் வரக்கூடாது என்று இலக்கணம் கூறுகிறது.
எனவே 'ப்ரேமா'- என்று தமிழில் எழுதக் கூடாது. பிரேமா என்று தான் எழுத வேண்டும்.

Wednesday, 15 December, 2010

மனம் பற்றற்றிருக்க...

துறவு என்றால், காவியுடை அணித்து காட்டுக்குப் போய் விடுவது; அல்லது ஏதாவது ஒரு மடத்தில் போய் சேர்ந்து விடுவது; மனைவி மக்களையும் வீட்டையும் விட்டு ஓடி விடுவது என்றுதான் பொதுவாக நாம் எண்ணுகிறோம்.ஆனால், உண்மையில் துறவு என்பது மனத்துறவு தான். மனம் எந்த பொருளிடத்திலும் யாரிடத்திலும் ஒட்டுதல் இல்லாமல் பற்று இல்லாமல் இருப்பது தான்.
            வீட்டில் இருந்து மனைவி மக்களோடு வாழ்ந்தாலும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். 'நான்' என்கிற செருக்கும் 'எனது' என்கிற பற்றுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த எந்தப் பொருளிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ அந்த அந்தப் பொருளினால் வருகின்ற துன்பம் நமக்கு இல்லை என்பதை உணர்ந்து நம் மனத்தைப் பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மனத்தில் பற்றுதலைத் துறக்காமல், துறந்தவரைப் போல வெளிவேடம் அணித்து வஞ்சித்து வாழ்பவரைப் போல் இரக்கமற்ற கொடியவர் வேறு யாருமில்லை என்கிறார் திருவள்ளுவர்.
                    "நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
                      வாழ்வாரின் வன்கணார் இல்" -குரல் 276
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களையும் நாம் அடக்கி ஆள வேண்டும். அவை நம்மை ஆட்டிப் படைக்க விட்டுவிடக் கூடாது. அப்போது தான் பற்றற்று இருக்க முடியும்.
                 "ஓர் அழகான ஓவியத்தை கண்டதும் அதனை வாங்க வேண்டும்- வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்- என்று விரும்புகின்றவனை விட, அதனை வாங்க நினைக்காமல் வேடிக்கை பார்ப்பவனே மிகுதியாக அதன் அழகை சுவைக்கிறான். அதுபோல் எதனையும் நம்முடையது - நமக்காக உள்ளது என்று பற்று  வைக்காமல் உலகத்தை அனுபவிக்க வேண்டும்" என்கிறார் விவேகானந்தர்.
                   "படகு தண்ணீரில் இருக்கலாம், ஆனால் தண்ணீர் படக்குக்குள் நுழையக்கூடாது. நுழைந்தால் படகு கவிழ்ந்து விடும். அதுபோல் மனிதன் உலகத்தில் வாழலாம், ஆனால் உலகப்பற்று அவனிடத்தில் இருக்க கூடாது" என்கிறார் இராமகிருஷ்ணர்.
                   "இவ்வுலகத்தில் ஒன்றும் நிலையானது அன்று. மிகவும் நெருங்கியுள்ள ஒவ்வொரு பொருளின்றும் நாம் விடுபடுதல் வேண்டும். அப்படி விடுபடுவதே பேரின்பத்திற்கு வழியாகும்" என்கிறார் புத்தர்.
                   "தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதில் பற்று கொண்டால், ஆன்மா ஒரு போதும் மகிழ்ச்சி அடையாது" என்கிறார் மகாவீரர்.
          
                           மனம் பற்றற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நிலையாமையைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். உடல் நிலையாமை, இளமை நிலையாமை,செல்வம் நிலையாமை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "பிறக்கும் பொது நாம் என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்பொழுது நாம் என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லையே! அப்படி இருக்க பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம்மோடு வந்து சேர்ந்திருக்கும் பொருள்களின் மேல் நாம் ஏன் பற்று வைக்க வேண்டும்?.
"நம்மி கட்டி அனைத்துக் கொஞ்சுகின்ற மனைவியும் மக்களும், தச்சன் ஒருவன் மரத்தை வெட்டி சாய்ப்பது போல் காலன் உடலை கீழே சாய்த்து விட்டால், அலறி அழுது இடுகாடு மட்டும் தான் வருவார்களே அன்றி அதற்க்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைப்பார்களா? வைக்க மாட்டார்களே!
         "நம் உடலைவிட்டு உயிர் பிரிகின்ற வரையில் தான் எல்லாம் நம்முடன் இருக்கின்றன. சொத்தும் சுகமும் வீடுவரை தான். கண்ணீர் விட்டு அழுகின்ற மனைவியோ தெருவரையில் தான். விம்மி விம்மி அழுது புலம்புகின்ற மக்களோ இடுகாடு வரையில் தான்! அதற்குப் பின் நம் உயிரோடு வருவது நாம் செய்த புண்ணியம் பாவம் என்கிற நல்வினை தீவினை தானே!" என்றெல்லாம் பட்டினத்தார் கூறும் கருத்துக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நினைத்துப் பார்த்தால் பற்றற்ற மனம் வந்துவிடுமே!