நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Monday 9 August, 2010

தலைக்கனம் பிடித்து அலைகிறீர்களா?


உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள் உள்ளன; அவைகளைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், வியக்கிறோம். ஆனாலும், இவைகளை விட பெரிய விசித்திரம் ஒன்றுள்ளது. நம் கண்களால் தினமும் காண்கிறோம்; ஆனால், அதைப் பற்றி சிந்திப்ப தில்லை!
மனிதன் பிறக்கும் போது, ஒன்றுமே இல்லாமல் பிறக்கிறான். அதன் பின்னர், எப்படியெல்லாமோ வாழ்க்கை நடத்துகிறான். படிக்கிறான், பட்டம் பெறுகிறான், ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான், புதிது புதிதாக ஏதோ கண்டுபிடிக்கிறான். பணம் சம்பாதிக்கிறான், புகழ் சம்பாதிக்கிறான், பாராட்டுக்கள் பெறுகிறான். மேலும், வீடு, வாசல், கார், பங்களா, மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் இவைகளையெல்லாம் கண்டு பேரானந்தப்படுகிறான்.

எல்லார் மீதும் அன்பைப் பொழிகிறான். மனைவி, மக்கள், சுற்றத்தார் என்று மட்டுமில்லை... அவன் வீட்டு நாய், தென்னை மரம், வாழை மரம் முதலியவைகளின் மீதும் அன்பு செலுத்துகிறான். தினமும் பார்த்துப் பார்த்து ஆனந்தப்படுகிறான். ரொம்ப சரி... எத்தனை காலத்துக்கு இப்படி ஆனந்தப்படுகிறான்? அவனது வாழ்நாள் முழுவதும் ஆனந்தப்படுகிறான்!
இப்படி எவ்வளவு காலத்துக்கு இவைகளை அனுபவித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று சிந்திப்பதே இல்லை. ஏதோ கலியுகம் முடியும் வரை இப்படியே இருக்கப் போவதாக எண்ணம். இவன் எண்ணம் இப்படி இருக்கலாம். ஆனால், விதி என்பது எப்படி இருக்கும்? அது தான் தெரியாது! ஏதோ ஒரு நாள் படுத்துத் தூங்கியவன் எழுந்திருப்பதில்லை; ஒரு வாய் காபி குடித்தவன், அடுத்த வாய் காபி குடிப்பதில்லை; வெளியே சென்றவன் திரும்பி வருவதில்லை. யாரோ தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் போடுகின்றனர். வைத்தியர் வந்து பார்த்து கையை விரித்துவிட்டுப் போகிறார்.

ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றால், யாரிடமும் சொல்லிக் கொள்வதுமில்லை; உத்தரவு கேட்டுக் கொள்வதுமில்லை; எந்த இடத்துக்குப் போகிறான் என்று சொல்வதுமில்லை. எங்கிருந்தோ வந்தான், எங்கேயோ போனான். எங்கே போனான்?
போன இடம் இருப்பவர்களுக்குத் தெரியாது; போனவனுக்கும் எங்கிருந்து வந்தோம் என்று தெரியாது; போகுமிடமும் தெரியாது. மீண்டும் ஒரு ஜென்மம்.

இது தான் பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலன். பாவமும் வேண்டாம், புண்ணியமும் வேண்டாம், பிறவியும் வேண்டாம் என்று சும்மா இருக்க முடிகிறதா? எதையோ செய்கிறான். புண்ணிய காரியமாகவே இருந்தாலும் புண்ணியத்தை அடைகிறான். அதன் பலனை அனுபவிக்க மீண்டும் பிறவி! அடக்கடவுளே மீண்டும் பிறவியா? வேண்டாம் என்றால் என்ன செய்வது? எந்த புண்ணிய காரியம் செய்தாலும், அதன் பலனை ஈசுவரார்ப்பணம் செய்து விடு என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது தானே நற்கதி கிடைக்கும்.
உலகில், என்னுடையது, நான் என்ற அகம்பாவம் உள்ள வரையில்,விமோசனம் இல்லை. பிறப்பு, இறப்பு, பாசம், பந்தம் எல்லாம் இருக்கும். ஆனால், ஆசை விடுகிறதா? இதுவல்லவோ பெரிய விசித்திரம்!

3 comments:

Priya said...

உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது. நல்ல சிந்தனையை தூண்டும் விதமாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிங்க... வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

jagadeesh said...

Thankyou priya....

Unknown said...

Good MIGAVUM NANTRI.

Please visit http://thavayogi.blogspot.com/

Post a Comment