நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Sunday, 20 June, 2010

தர்ம சிந்தனை வேண்டும்!


"மேதினியிலிட்டார் பெரியோர், இடாதா ரிழி குலத்தோர்...' என்று இரண்டே ஜாதிகள்தான் என்றனர். தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் முக்கியத்துவத்துக்காக சொல்லப்பட்ட பாடல் வரி இது.

இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பது, பெரியோர் கொள்கை; ஆனால், எல்லாருக்குமே மனசு வருகிறதா? கையில் 99 ரூபாய் இருந்தால், அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து, நூறு ரூபாயாக பிக்சட் டிபாசிட்டில் போடத்தான் ஆசைப்படுகிறான். இப்படி, நிறைய பொருளிருந்தும், இல்லாதவருக்குக் கொடாதவன் என்ன நிலையை அடைகிறான் என்பதற்கு, ஒரு பாடல் இருக்கிறது.

"மண்ணாஞ் சட்டி கரத்தேந்தி மர நாய் கவ்வுங்காலினராய், அண்ணாந்த் தேங்கியிருப்பாரையறிந்தோ மறிந் தோமம்மா, பண்ணார் மொழியார் பாலடிசில் பைம் பொற்காலத்தில் பரிந்தூட்ட, உண்ணா நின்ற போதொருவர்க் குதவா மாந்தரிவர் தாமே!'
"கையில் மண் சட்டியேந்தி, மர நாய் கவ்வும் அளவுக்கு வியாதியுள்ள கால்களைக் கொண்டு, எங்கு சோறு கிடைக்குமோ என்று ஏங்கி அலைந்து கொண்டிருப்பவர்களைக் கண்டோம், கண்டோம்.

"அவர்கள் யாரெனில், தேன்மொழி பேசும் மங்கையர்கள், பொன் கலத்தில் பாலோடு கலந்த அன்னத்தை மிக அன்போடு ஊட்ட, அதை ரசித்து உண்ணும் சமயம், "ஐயா பசி!' என்று வந்தவனுக்கு ஒன்றும் கொடாதவர்கள் தான்!' என்றனர்!

இப்படியெல்லாம் அநீதிகளைச் சொல்லியிருக்கின்றனர். அதாவது, சமுதாயத்தில் தானே சாப்பிட்டு, எல்லா சுகங்களையும், தானே அனுபவிக்காமல், ஏழைகளையும் கொஞ்சமாவது கவனிக்க வேண்டும். விதி வசத்தால் அவன் ஏழையாகவோ, பிச்சைக்காரனாகவோ வந்து நிற்கிறான். முடிந்த அளவு தர்மம் செய்ய வேண்டும்.

தர்மம் என்பதில் கண்ணை மூடி, வாரி வழங்க வேண்டுமென்பதில்லை. ஏதோ கொஞ்சம் போதுமே... தர்ம சிந்தை இருந்தாலே நல்லது தானே! "சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கை, தர்மம் செய்!' என்றனர். தற்காலத்தில், அவ்வளவு செய்ய முடியாது; மனசும் வராது. ஏதோ ஓரளவு செய்தாலும் போதும். பணம், பொருள் எல்லாமே தெய்வானுக்கிரகத்தால் கிடைப்பது தானே!

பஸ்சில் போனவன், மாருதி காரில் போகிறான்; மாருதி காரில் போனவன் பஸ் ஸ்டாண்டில் நிற்கிறான். பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அதனால், உள்ளபோதே ஏதாவது தர்மம், நல்ல காரியம் செய்துவிடு! நாளைய நிலை என்னவோ... யார் கண்டது?

பிறருக்குக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. "ஒரு பங்கு தர்மம் செய்தால், பத்து பங்கு அதுவாகத் திரும்ப வரும்...' என்று சொன்னார்கள். கொடுத்துப் பார்த்தால் தானே தெரியும்! வருமோ, வராதோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி? கொடுத்துதான் பார்க்கலாமே... முயன்று தான் பாருங்களேன்!
- வைரம் ராஜகோபால்

1 comment:

Priya said...

மிகவும் நல்ல கருத்து.நிச்சயம் எல்லோருக்கும் இந்த சிந்தனை வேண்டும். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி நாம் சந்தோஷத்தை அடைவதற்கான சிறந்த வழி இதுதானே.

Post a Comment